9 மாவட்டங்களில் அதி கன மழை எச்சரிக்கை.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறவுள்ளது. இதனையடுத்து காற்றின் தீவிரத்தை பொறுத்து தாழ்வு மண்டலாம் மற்றும் புயலாக உருவாகக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தற்போது தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்தாக கூறப்பட்டுள்ளது.
இந்த மழையானது வருகிற 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் தென், டெல்டா மற்றும் கடற்கரையோர மாவட்டங்களில் பெய்ய கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் மழை தொடர்ந்து பெயு்து வருவதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பு விடுத்துள்ளனர்.