20 சீட், ரூ.100 கோடி கேட்கிறார்கள் - உடைத்துப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்
தமிழகத்தைப் பொறுத்தவரை, பிரதானக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இருந்தாலும், தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு வருகின்றன.
இந்த கூட்டணி தேர்தலுக்கு தேர்தல் சில மாற்றங்கள் அடைந்துள்ளன.
தமிழக தேர்தல் அரசியலில் 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்ற எல்லா தேர்தல்களிலும் தி.மு.க வெற்றி பெற்று வருகிறது. அ.தி.மு.க தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு, தி.மு.க-வின் வலுவான கூட்டணி ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு முதல் தி.மு.க கூட்டணி மாறாமல் இருந்து வருகிறது.
தமிழக அரசியலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் 10 சதவீத வாகுகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக பலமடைந்துள்ளது. நாம் தமிழர் கட்சி தேர்தலில் தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு வருகிறது. இதனால், கடந்த மக்களவைத் தேர்தலில், தி.மு.க தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவியது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி வருகைக்குப் பிறகு, வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்திட்டமிட்டு வருகிறார்.
அண்மையில் விஜய்யின் த.வெ.க உடன் அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்தை நடத்தி வருவதாகவும் விஜய் 80 சீட் மற்றும் துணை முதலமைச்சர் பதவி கேட்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கு த.வெ.க மறுப்பு தெரிவித்தது.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் யதார்த்தமாகப் பேசுவது அவ்வப்போது ஊடகங்களில் கவனம் பெறும். அந்த வகையில், தற்போது அவர், அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு வருபவர்கள் என்ன கேட்கிறார்கள் என்பது குறித்து உடைத்துப் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இன்று (நவம்பர் 19) அ.தி.மு.க கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.க 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம், இந்த 53 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறோம் என்று கூறினார்.
அப்போது, அ.தி.மு.க உடன் கூட்டணிக்கு வரும் கட்சிகள் குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். நம்முடைய கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் ரண வேதனை இருக்கிறது. யார் வந்தாலும் சும்மாவா வருகிறார்கள். ஒரு 20 சீட் கொடுங்கள். ஒரு 50 கோடி கையில் கொடுங்கள். ரூ.100 கோடி கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஏதோ நெல், அரிசி விற்பது மாதிரி பேரம் பேசுகிறார்கள். நாம் எங்கே போவது? இப்போது அ.தி.மு.க மார்க்கெட் போய் கொண்டிருக்கிறது. எடப்பாடியாரை தான் மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று அந்த கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.
அப்போது ஏன் தலைவரே.. ரூபாயை குறைச்சிக்க கூடாதா? என்று சொன்னால்.. இதை வைத்து தான் பிஸ்னஸ் நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த கொடுமையில் எடப்பாடி மாட்டிக்கொண்டு இருக்கிறார். கூட்டணிக்கு பேசிக் கொண்டு இருக்கிறார். விரைவில் நல்ல செய்தி வரும். கள ஆய்வு என்பது நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதுதான். ஆகவே, நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு கட்சிக்கு வெற்றியைத் தேடி தர வேண்டும்' என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.