📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 05-11-2022 சனிக்கிழமை
சூரத்துல் முத்தஸ்ஸிர் – 74 (போர்த்திக் கொண்டிருப்பவர்)
(மக்கீ) பிரிவு - 2, சொற்கள் – 255, வசனங்கள் – 56, எழுத்துகள் – 1010
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
ருகூஃ 1
1. போர்த்திக் கொண்டிருப்பவரே!
2. எழுந்திருப்பீராக! பிறகு (மக்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பீராக!
3. உம்முடைய ராப்பைப் பெருமைப்படுத்துவீராக!
4. உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக்கிக் கொள்வீராக!
5. அசுத்தத்தை வெறுப்பீராக!
6. (பிறருக்குக் கொடுத்ததைவிட அவர்களிடமிருந்து) அதிகத்தை(ப் பெற்று கொள்ளலாம் என)க் கருதி (அவர்களுக்கு) உபகாரம் செய்ய வேண்டாம்.
7. மேலும், உம்முடைய ராப்புக்காக பொறுமையுடனிருப்பீராக!
8. பிறகு (ஸுர் என்னும்) குழலில் ஊதப்படும்போது –
9. அப்போது – அந்த நாள் கடினமான நாளாகும் –
10. காபிர்கள் மீது இலேசானதல்ல.
11. என்னையும், நான் தனித்த நிலையில் (பிறர் உதவியின்றி) படைத்தேனே அந்த ஒருவனையும் விட்டுவிடுவீராக!
12. அவனுக்கு ஏராளமான செல்வத்தையும் நான் கொடுத்தேன்.
13. (என்றும்) உடனிருக்கும்படியான ஆண் மக்களையும்... (கொடுத்தேன்).
14. அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளையும், தயார் செய்து கொடுத்தேன்.
15. பின்னரும் நான் (அவனுக்குச் செல்வங்களை மேலும்) அதிகமாக்க வேண்டுமென ஆசைப்படுகிறான்.
16. அவ்வாறல்ல! நிச்சயமாக அவன் நம்முடைய வசனங்களுக்கு முரனானவனாக இருந்தான்.
17. விரைவில் நான் அவனை (வேதனை என்னும்) சிகரத்தில் ஏறச் செய்வேன்.
18. நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்தான்: இன்னும் (அது பற்றி என்ன சொல்வதென்று தனக்குள்) ஒரு முடிவெடுத்தான்.
19. எனவே, அவன் அழிவானாக! எவ்வாறு அவன் முடிவெடுத்தான்!
20. பிறகும் அவன் அழிவானாக! எவ்வாறு அவன் முடிவெடுத்தான்!
21. பின்னரும் அவன் நோட்டமிட்டான்.
22. பிறகு கடுகடுத்தான்: முகத்தைச் சுளித்தான்.
23. பிறகு புறமுதுகு காட்டிச் சென்றான்: பெருமை கொண்டான்.
24. பிறகு, “இது (குறிகாரர்களிடமிருந்து கற்றுச்) சொல்லப்பட்டுவரும் ஒரு சூனியமேயன்றி வேறில்லை” என்று கூறினான்.
25. “இது மனிதனுடைய சொல்லேயன்றி வேறில்லை,” (என்றும் கூறினான்.)
26. அவனை ஸகர் (என்னும்) நரகத்தில் நான் புகச் செய்வேன்.
27. (நபியே!) ஸகர் என்பது என்னவென்று உமக்கு எது அறிவித்துத் தந்து?
28. (நரகவாசிகளின் உடல்களில் எதனையும்) அது மிச்சம் வைக்காது: (எதனையும்) விட்டுவிடாது.
29. (அது) மனிதர்களை (எரித்து அவர்கள் மேனியையே) மாற்றிவிடும்.
30. அதன் மீது பத்தொன்பது பேர் இருக்கின்றனர்.
31. இன்னும் நரகக் காவலர்களை மலக்குகளாகவே அன்றி (மனிதர்களில் எவரையும்) நாம் ஆக்கவில்லை: அவர்களுடைய எண்ணிக்கையை காபிர்களுக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை: (ஏனெனில்) வேதங் கொடுக்கப்பட்டவர்கள் உறுதி கொள்வதற்காகவும், (அவர்களில்) ஈமான் கொண்டவர்கள் (தம்) ஈமானை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும்: இன்னும் வேதங் கொடுக்கப்பட்டவர்களுக்கும், (அவர்களல்லாத மற்ற) முஃமீன்களும் சந்தேகப் படாமலிப்பதற்காகவும், இன்னும் எவர்களுடைய இதயங்களில் (சந்தேகமென்னும்) நோய் இருக்கிறதோ அவர்களும் காபிர்களும், “இதனைக் கொண்டு உதாரணமாக அல்லாஹ் எதனை நாடியிருக்கிறான்?” என்று கூறுவதற்காகவும் (இவ்வாறு ஆக்கியுள்ளோம்:) இவ்வாறே தான் நாடியவரை அல்லாஹ் வழி கெடச் செய்கிறான்: இன்னும் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்: மேலும் உம்முடைய ரப்பின் படைகளை அவனைத் தவிர (வேறு எவரும்) அறியமாட்டார் –இவை (ஸகர் பற்றிய சேதிகள்) மனிதர்களுக்கு உபதேசமாகவே தவிர (வேறு) இல்லை.
ருகூஃ 2
32. மெய்யாக! சந்திரனின் மீது சத்தியமாக!
33. இரவின் மீது – அது பின்னோக்கிச் செல்லும்போது – சத்தியமாக!
34. விடியற்காலை மீது – அது வெளிச்சமாகும்போது – சத்தியமாக!
35. நிச்சயமாக அது (-ஸகர்) வலுப்பமானவற்றில் ஒன்றாகும்.
36. (அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நிலையில் (வலுப்பமானதாகும்).
37. உங்களில் (நன்மையின் பால்) முன்னோக்கியோ அல்லது (நன்மையை விட்டுப்) பின்னோக்கியோ செல்ல நாடுவோருக்கு (அது அச்சமூட்டி எச்சரிப்பதாகும்).
38. ஒவ்வோர் ஆத்மாவும் அது சம்பாதித்ததைக் கொண்டே ஈடு வைக்கப்படுவதாக இருக்கிறது –
39. வலப்புறத்தாரைத் தவிர.
40. சொர்க்கச் சோலைகளில் அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்வார்கள்:
41. குற்றவாளிகளைப் பற்றி –
42. “உங்களை ஸகர் (என்னும்) நரகத்தில் புகுத்தியது எது?” (என்று கேட்பார்கள்.)
43. (அதற்கு) “தொழுபவர்களில் (உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை” என்று அவர்கள் கூறுவார்கள்.
44. “இன்னும் ஏழைக்கு உணவளிப்போராகவும் நாங்கள் இருக்கவில்லை.”
45. “இன்னும் (வீணானவற்றில்) மூழ்கியிருந்தோருடன் நாங்கள் மூழ்கியவர்களாக இருந்தோம்.”
46. “இன்னும் இந்த நியாயத் தீர்ப்பு நாளைப் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.
47. மரணம் எங்களுக்கு வரும் வரை (இவ்வாருதாம் இருந்தோம் – என்று கூறுவார்கள்.)
48. எனவே, (அந்நாளில்) பரிந்துரையாலர்களின் பரிந்துரை அவர்களுக்குப் பலனளிக்காது.
49. எனவே, அவர்களுக்கு என்ன நேர்ந்தது? நல்லுபதேசத்தைப் புறக்கனிக்கிறவர்களாக இருக்கின்றனர்.
50. நிச்சயமாக அவர்கள் வெருண்டோடுகின்ற (காட்டுக்) கழுதைகளைப் போல் இருக்கின்றனர் –
51. சிங்கத்தை விட்டும் அவை வெருண்டோடின.
52. எனினும், அவர்களிலிருந்து ஒவ்வொரு மனிதனும் விரித்து வைக்கப்பட்ட ஏடுகள் (தனக்குக்) கொடுக்கப்பட வேண்டுமென நாடுகிறான் –
53. அவ்வாறல்ல – எனினும், மறுமையை அவர்கள் பயப்படுவதில்லை.
54. அவ்வாறல்ல – நிச்சயமாக (குர்ஆனாகிய) இது நல்லுபதேசமாகும்.
55. எனவே, எவர் (நற்போதனை பெற) விரும்புகிறாரோ அவர் இதனை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்.
56. அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் நற்போதனை பெற மாட்டார்கள்: (நீங்கள்) பயபக்தி கொள்வதற்கு அவனே உரியவன்: இன்னும்
(அவனே நம்மை) மன்னிப்பதற்கும் உரியவன்.