ஹிண்டன்பர்க் அறிக்கை: செபி தலைவர் ஒப்புதல்
அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.
"இந்தியாவில் ஒழுங்கின்மை மற்றும் உறுதியற்ற தன்மையை, குறிப்பாக பொருளாதார ஸ்திரமின்மையை உருவாக்க விரும்புகிறார்கள் என்ற அவர்களுடைய சதி தெளிவாக தெரிகிறது" என அவர் கூறினார்.
அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் தனது முதல் அறிக்கையை வெளியிட்டு 18 மாதங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதானி குழுமத்திற்கு எதிராக ஜனவரி, 2023இல் வெளியான அந்த அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "கடந்த 2022ஆம் ஆண்டு மாதபி புச் செபி தலைவரான உடனேயே, அவரை கௌதம் அதானி சந்தித்தது குறித்த கேள்விகளை இது எழுப்புகிறது. அந்த நேரத்தில் அதானி நிறுவனத்தின் பரிமாற்றங்கள் தொடர்பாக செபி விசாரித்து வந்தது நினைவிருக்கலாம்" எனப் பதிவிட்டுள்ளார்.
மாதபி பூரி புச்சின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் செபியின் தலைவராக அவருடைய பங்கு ஆகியவை குறித்து இந்த அறிக்கை கேள்விகளை எழுப்பியுள்ளது. அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஹிண்டன்பர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா இன்ஃபோலைனின் 'இ.எம். ரீசர்ஜண்ட் ஃபண்ட் மற்றும் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்' நிறுவனம் மூலம் இயக்கப்படும் அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக செபி இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி தொடர்பான தகவல்கள் மிகவும் தெளிவற்றதாகவும் சிக்கலான கட்டமைப்புகளைக் கொண்டதாகவும் இருப்பதாக ஹிண்டன்பர்க் கூறியுள்ளது.
செபி தலைவர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக இவ்வாறு செயல்பட்டுள்ளதால், செபியின் வெளிப்படைத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. செபி தலைமை மீது இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
Xசெபி குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ஹிண்டன்பர்க் பெற்ற ஆவணங்களின்படி, செபி தலைவராக மாதபி நியமிக்கப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, மொரீஷியஸை சேர்ந்த நிதி நிர்வாக நிறுவனமான ட்ரைடென்ட் டிரஸ்டுக்கு, 'குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட்'இல் தானும் தனது மனைவி செய்துள்ள முதலீடுகள் தொடர்பாக தவல் புச் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
மாதபி - தவல் தம்பதி மறுப்பு
பிடிஐ செய்தி முகமையின்படி, மாதபி புச் மற்றும் அவரது கணவர், "தங்களுக்கு எதிரான இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைத் தாங்கள் மறுப்பதாக" தெரிவித்துள்ளனர்.
அவர்கள், "எங்களுடைய வாழ்க்கை மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் திறந்த புத்தகம் போன்றவை. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து தேவையான தகவல்களும் செபியிடம் அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.
"நாங்கள் தனிநபர்களாக இருந்தபோது உள்ள ஆவணங்கள் உட்பட மேலும் தேவைப்படும் நிதி ஆவணங்களை வெளிப்படுத்துவதற்கு எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை" என இருவரும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முழு வெளிப்படைத்தன்மைக்காக, உரிய நேரத்தில் இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
"செபி அமைப்பு ஹிண்டன்பர்க் ஆராய்ச்சிக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுத்தது. நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியது. அதற்குப் பதிலாக, ஹிண்டன்பர்க் செபியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயன்றுள்ளது" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மாதவி-தவல் தம்பதி விளக்க அறிக்கை
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் கூட்டாக ஒரு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், "ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிதியில் செய்யப்பட்ட முதலீடு 2015-இல் அவர்கள் [மாதபி மற்றும் தவல் புச்] இருவரும் சிங்கப்பூர் குடிமக்களாக இருந்தபோது செய்யப்பட்டது," என்று கூறப்பட்டுள்ளது. மேலும், "மாதபி செபியின் முழு நேர உறுப்பினராகச் சேருவதற்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த முதலீடு செய்யப்பட்டது," என்று கூறப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கை மேலும், "தலைமை முதலீட்டு அதிகாரியான அனில் அஹுஜா, பள்ளி மற்றும் ஐஐடி டெல்லி காலத்திலிருந்தே தவலின் நண்பர் என்பதாலும், சிட்டி பேங்க், ஜேபி மோர்கன், மற்றும் 3ஐ குரூப் பிஎல்சி ஆகியவற்றின் முன்னாள் ஊழியர் என்பதாலும், பல தசாப்தங்களாக வலுவான முதலீட்டுத் தொழிலைக் கொண்டிருந்ததாலும் இந்த நிதியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது," என்கிறது.
"அனில் அஹுஜா உறுதிப்படுத்தியபடி, எந்தவொரு அதானி குழும நிறுவனத்தின் எந்தவொரு பத்திரம், பங்கு, அல்லது டெரிவேட்டிவ் ஆகியவற்றில் எந்த நேரத்திலும் நிதி முதலீடு செய்யவில்லை," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"2019-ஆம் ஆண்டு தவல், பிளாக்ஸ்டோன் தனிநபர் ஈக்விட்டி நிறுவனத்துக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இது மாதபி செபியின் தலைவராகும் முன்பு நடந்தது. அதன்பின் இந்த நிறுவனத்தின் மீது முடிவெடுக்கும் உரிமை மாதபிக்கு இல்லை என செபியின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டது," என்கிறது அந்த அறிக்கை.
செபியின் அத்தனை விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும், இந்தியாவில் பல விதிமீறல்களுக்காக விளக்கம் கேட்கப்பட்டிருக்கும் ஹிண்டன்பர்க், செபி மீதும் அதன் தலைவர் மீதும் அவதூறு பரப்புகிறது, என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?
ஹிண்டன்பர்க்கின் புதிய அறிக்கை வெளியான பின்னர், காங்கிரஸ், "அதானியின் பெரும் ஊழலின் அளவு குறித்து நாடாளுமன்றக் கூட்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, செபி தலைவர் மாதபி புச் பதவி விலக வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நிலுவையிலுள்ள விசாரணையைக் கருத்தில் கொண்டு, செபி தலைவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். அவரும் அவரது கணவரும் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும், இன்டர்போலிலும் லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
Xசர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
"பங்குச் சந்தையில் திருகு வேலை செய்து மோசடியில் ஈடுபட்டதாக" அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றச்சாட்டு தெரிவித்தது.
துறைமுகங்கள் முதல் எரிசக்தி வரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தது.
சிபிஐ அல்லது நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து, உண்மை வென்றுவிட்டதாக அதானி குழுமம் தெரிவித்தது.
பாஜக கூறியது என்ன?
"இந்திய விசாரணை அமைப்புகளின் வளையத்திற்குள் இருக்கும் ஹிண்டன்பர்க்கிடம் இருந்து இந்த அறிக்கை வந்துள்ளது. எதிர்க்கட்சிகளும் அந்நிறுவனத்துடன் இணைந்து பேசுகின்றன. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் எழுப்பினர்" என பாஜக செய்தித்தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தார்.
கடந்தமுறை அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை 2023-ல் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு சில தினங்கள் முன்னதாக வெளியானது.
"இந்த கூட்டத்தொடரின் போது இத்தகைய அறிக்கை வெளியாகும் என்பதை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னதாக அறிந்திருப்பர் என நேரடியாகவே குற்றம்சாட்டுகிறேன்." என அவர் கூறினார்.
கூட்டத்தொடர் முடிந்த பின்பு இந்த அறிக்கை வந்திருப்பதால், கூட்டத்தொடரின் போது இது வந்திருக்க வேண்டும் என, காங்கிரஸ் அசௌகரியமாக உணர்வதாக அவர் தெரிவித்தார்.
அதானி குழுமம் என்ன சொல்கிறது?
மாதாபி புச்-ஐ குறிவைக்கும் ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு அதானி குழுமம் பதிலளித்துள்ளது. ஹிண்டன்பர்க் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய தகவல்களைத் தீங்கிழைக்கும் உள்நோக்கத்துடன் தவறாகத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியுள்ளதாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இதன்மூலம் தனிப்பட்ட ஆதாயத்திற்காக முன்முடிவுகளுக்கு வித்திடும் நோக்கத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது உண்மைகள் மற்றும் சட்டங்களுக்கும் புறம்பானது எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், "அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது முழுமையாக விசாரிக்கப்பட்டுள்ளன. இவை ஏற்கெனவே 2024 ஜனவரியில் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன" என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது இப்போது மட்டுமல்லாமல், கடந்த பல ஆண்டுகளாக நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தொடர் நடைபெறும் சமயங்களில் தான் இத்தகைய அறிக்கைகள் வெளியிடப்படுவதாக அவர் கூறினார்.