'விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது!' - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார் .
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டின் ஒலிம்பிக்' என சொல்லும் அளவிற்கு 'முதலமைச்சர் கோப்பை' போட்டிகளை பிரமாண்டமாக நடத்திக் காட்டியுள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டை Extra curricular ஆக்டிவிட்டியாகவோ, Co curricular ஆக்டிவிட்டியாகவோ பார்க்கவில்லை. அவர் விளையாட்டை Main curricular ஆக்டிவிட்டியாகவே பார்க்கிறார்.
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு உருவாகி வருகிறது. அதற்கு சிறந்த உதாரணம்தான் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள். விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது. தமிழ்நாட்டில் விளையாட்டினை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டிகளை நாம் நடத்தி காட்டியிருக்கிறோம். முதலமைச்சர் தலைமையிலான அரசு ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை இன்றைக்கு முதன்மை மாநிலமாக மாற்றிக்காட்டியிருக்கிறது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை உலகத்தரத்தில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல் நமது முதலமைச்சர் 83 கோடி ரூபாய் ஒதுக்கி தந்தார்கள். அதுமட்டுமல்லாமல் பரிசு தொகைக்கு மட்டும் ரூ.37 கோடி ரூபாய் ஒதுக்கி தந்துள்ளார்கள்.
நாட்டிலேயே ஒரு மாநில அரசால் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில், அதிக வீரர்கள் கலந்து கொள்வதும், பரிசுத் தொகை வழங்கும் நம்பர் 1 மாநிலம் நம்முடைய தமிழ்நாடுதான். இதற்காக நம்முடைய விளையாட்டுத்துறை, விளையாட்டு வீரர்கள் சார்பாக என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.