விஜய்க்கும் எங்களுக்கு ஒத்துப்போகாது: சீமான் திட்டவட்டம்!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் அறிவித்த கொள்கைகளுக்கு பல கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விஜயின் கொள்கைகளை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சீமான் கூறியதாவது..,
விஜய் என்னை விமர்சனம் செய்கிறார் என ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்?
அவரின் கொள்கை கோட்பாடு எங்களின் கொள்கையோடு ஒத்துப்போகவில்லை.
நான் கூறுவது என் நீண்ட கால இன வரலாறு. இங்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்பது.
திராவிட கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள். தமிழ் நேயர்கள்.
கட்சி ஆரம்பித்து அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும் என நான் வரவில்லை. படம் எடுத்து பிழைக்க வந்தவன்.
வரலாறு, காலம் எனக்கு இந்தப் பணியை கொடுத்தது. காரணம் என் இனத்தின் மரணம்.
எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன். அதை செய்கிறேன்.
திராவிடமும், தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் சொன்னால், அது எங்களது கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று கிடையாது. அது வேறு. இது வேறு.
இது எனது நாடு. எனது தேசம். இங்கு வாழும் மக்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல்.
விஜய் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை. பெரியாரின் கொள்கைகளை முன்னெடுப்பேன் என்ற விஜய் பேச்சிலும் ஒத்துப் போகவில்லை.
என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சி என பெயர் வைத்தபோது யாரும் எதிர்த்துப் பேசவில்லை
நாங்கள் தமிழ் தேசம்பெயர் வைத்த போது பாசிசம், பிரிவினைவாதம் என சொல்கிறீர்கள். இது ஏற்புடையது அல்ல.
என் பயணம் என் கால்களை நம்பித்தான்; யார் காலையும் நம்பி பயணிக்காதவன். நான் மிகுந்த தெளிவான பயணத்தை கொண்டவன். நான் தனித்துப் போட்டியிடுவேன் என ஏற்கனவே சொல்லிவிட்டேன்; நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை என தெரிவித்தார்.