வக்பு திருத்த மசோதா தாக்கல் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பு
வக்பு திருத்த மசோதா குறித்து விசாரிக்கும் பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணை முடிவடையாததால், கால நீட்டிப்பு கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுதும் உள்ள வக்பு வாரிய சொத்துக்கள் நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கோடு, வக்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த, ஆக., 9ல் இந்த மசோதா, பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
ஆஜராகி விளக்கம்
பா.ஜ.,வைச் சேர்ந்த ஜகதாம்பிகா பால் தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டுக் குழு, மசோதா தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வந்தது. இதுவரை, 13 வக்பு வாரியங்களில் ஆய்வு செய்ததுடன், ஏழு மாநிலப் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதைத் தவிர, 42 அமைப்புகள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளன. இரண்டு நேரடி ஆய்வுகளும் நடத்தப்பட்டன. ஆனால், இரண்டாவது நேரடி ஆய்வுக் கூட்டத்தை, குழுவில் உள்ள எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதற்கிடையே, 92.28 லட்சம் பரிந்துரைகள், இ - மெயில் வாயிலாகவும், 4.99 லட்சம் பரிந்துரைகள் நேரடியாகவும் வழங்கப்பட்டுள்ளன.
கருத்து மோதல்
இந்த பார்லிமென்ட் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பு இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது. முறையாக விசாரணை நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்தக் கூட்டுக் குழுவின் பதவிக் காலம் நாளை முடிவடைய உள்ள நிலையில், இந்த மசோதா, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சிகளைத் தவிர, பா.ஜ.,வைச் சேர்ந்த சில எம்.பி.,க்கள், குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து, கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், தீர்மானம் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் வரை பதவி காலத்தை நீட்டிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதனால், இந்த மசோதா அடுத்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.