லண்டனில் அரசியல் படிப்பு நிறைவு; நவ. 28-ம் தேதி தமிழகம் திரும்புகிறார் அண்ணாமலை
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார்.
லண்டன் சென்ற அண்ணாமலை அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதே நேரத்தில், அண்ணாமலை லண்டன் சென்றதால், தமிழ்நாட்டில் பா.ஜ.க நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வழிநடத்த தமிழ்நாடு மாநில பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழு ஒன்றை நியமித்து பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழ்நாடு பா.ஜ.க ஒருங்கிணைப்புக் குழு மாநில பா.ஜ.க-வில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாம்லை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்துவிட்டு, லண்டனில் இருந்து நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
லண்டனில் இருந்து நவம்பர் 28-ம் தேதி தமிழகம் வரும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, டிசம்பர் 1-ம் தேதி கோவையில் நடைபெறும் பா.ஜ.க நிகழ்ச்சி பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்குப் பிறகு, அண்ணாமலை தொடர்ந்து பா.ஜ.க நிகழ்சிகளில் பங்கேற்க உள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், பா.ஜ.க-வின் ஓட்டு வங்கியை மேலும் பலப்படுத்த, கடந்த மக்களவைத் தேர்தலின் போது நடத்திய 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை போல, ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.