ராணிப்பேட்டை டூ கன்னியாகுமரி.. 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த 2.30 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை 91% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 156.6 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 305.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1090.8 மி.மீ, கோவையில் 792.3 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 40.9 மி.மீ, நாகப்பட்டினத்தில் 78.1 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. நாகையில் பெய்த மழை இயல்பை விட -29 சதவிகிதம் குறைவாகும்.
அதேபோல அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வர மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாட்களில் என்னதான் மழை இயல்பை விட அதிகமாக பெய்திருந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மட்டுமே அதிகரித்து வந்தன. உள் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் போதுமான அளவுக்கு உயராமல் இருந்தது. ஆனால் தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இப்படி இருக்கையில் அடுத்த 2.30 மணி நேரத்தில், அதாவது இரவு 10 மணி வரை 17 மாவட்டங்களில் கனமழை பெய்யம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அரியலுர், பெரம்பலூர், தஞ்சை, தருமபுரி, தி.மலை, திருச்சி, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், நாமக்கல், நாகை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகருக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.