ரப்பர், பைப் ஏற்றுமதி நிறுவனத்தின் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை
சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு பாலிஹோஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் விமானங்கள் மற்றும் ஜேசிபி வாகனங்களுக்கு பயன்படுத்தும் ரப்பர் மற்றும் பைப் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனம், கடந்த 2023-24-ம் நிதியாண்டில் தங்களது வருமானத்தை குறைத்து காட்டியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அந்நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்த வருமான வரித்துறை அதிகாரிகள், அந்நிறுவனம் வரிஏய்ப்பு செய்ததற்கான முகாந்திரம் இருந்ததைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் அந்நிறுவனத்தின் வரவு, செலவு குறித்த ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள், பென்டிரைவ், உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலிஹோஸ் நிறுவனம் ரூ.200 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று நடக்கும் தேர்தலில் குறிப்பிட்ட கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இந்நிறுவனம் சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.