மேற்கு தொடர்ச்சி மலையில் சட்டவிரோத குவாரிகள்; விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற நேரிடும்
'கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், சட்டவிரோதமாக மண் அள்ளிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கோவை மாவட்டம், ஆலாந்துறை, வெள்ளிமலை பட்டினம் உள்ளிட்ட இடங்களில், சட்டவிரோத குவாரிகளில் செம்மண் எடுக்கப்படுவதாக, சிவா என்பவர் தொடர்ந்த வழக்கை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய, சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பகுதிகளை, கோவை மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., கனிம வளத் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகளுடன் சென்று, கோவை மாவட்ட சட்டப்பணிக் குழு தலைவர் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சட்டப்பணிக் குழு தலைவர் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நேற்று சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத் துறை தரப்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆஜராகி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் கேட்டார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜராகி, ''அந்த அறிக்கை வாயிலாக, 40 சதவீதம் மட்டுமே வெளிவந்துள்ளது. முழுமையாக ஆய்வு செய்யும்போது, முழுமையான விபரம் தெரியவரும். மனுதாரரை தாக்கியவர்களில் ஒருவரை கூட, இதுவரை போலீசார் கைது செய்யவில்லை,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:
இந்த அறிக்கையை பார்க்கும்போது, சட்டவிரோதமாக பெரியளவில் 10 மீட்டர் ஆழத்துக்கும் மேல் மண் எடுக்கப்பட்டுள்ளது. புகைப்பட ஆதாரங்களை பார்க்கும்போது, சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை எப்படி ஈடுகட்ட போகிறீர்கள்?
பெரும் மலைகள் காணாமல் போய் உள்ளன. சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; இவ்விவகாரத்தில், கனிம வளத் துறை உதவி இயக்குனர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
சட்டவிரோதமாக மண்ணை கொண்டு செல்ல வசதியாக, நீரோடை மீது பாலம் அமைத்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் அறிக்கையில் உள்ளன. சட்டவிரோதமாக மண் எடுத்தது யார் என தெரியவில்லை என, போலீசார் கூறுவதை, இந்த நீதிமன்றம் நம்ப வேண்டுமா?
மண் எடுத்தவர்கள் யார் என்பதை, இரண்டு நாட்களில் கண்டுபிடிக்க முடியாதா?
இந்த விஷயத்தில், அரசும், அதிகாரிகளும் தீவிரம் காட்டாவிட்டால், வழக்கை சி.பி.ஐ., போன்ற வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும்; சம்பந்தப்பட்டவர்களை 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிடவும் நேரிடும்.
வனப் பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பது குறித்து, வனத்துறை தகவல் தெரிவித்தும், கனிம வளத் துறை உதவி இயக்குனர், சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது; சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படும்; வனப் பகுதியில் எவ்வளவு பரப்புக்கு சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது; சட்டவிரோதமாக மண் எடுக்க உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரங்களுடன் விரிவான அறிக்கையை, தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
முழுமையாக அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும். வழக்கின் அடுத்த விசாரணையின்போது கனிம வளத்துறை ஆணையர், கோவை மாவட்ட எஸ்.பி., மாவட்ட வன அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்.
இந்த அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த பரிந்துரைகளுடன், மனுதாரர் தரப்பும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு, டிச., 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.