மேட்டூா் அணைக்கு நீர்வரத்து 31,575 கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 31,575 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தமிழகம், கா்நாடக காவிரி கரையோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதோடு கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100.01 அடியில் இருந்து 102.92 அடியாக உயா்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 29,850 கன அடியிலிருந்து 31,575 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7,500 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா் இருப்பு 68.68 டிஎம்சியாக உள்ளது.