முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு தாக்குதல்; தலையில் ரத்தக்காயம்..
மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியில் இருக்கிறார்.
அனில் தேஷ்முக் பயணம் செய்த காரின் பின் இருக்கையில் அவரது மருமகன் மற்றும் உதவியாளர் இருந்தனர். கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது வேகத்தடை ஒன்றுக்கு அருகில் காரின் வேகத்தை குறைத்துள்ளனர். அந்நேரம் அங்கு காத்திருந்த கும்பல் கற்களை வீசித்தாக்குதல் நடத்தி இருக்கிறது. அனில் தேஷ்முக் வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த கும்பல் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தி இருக்கிறது.
இம்முறை சட்டமன்ற தேர்தலில் தனது மகன் சலீல் தேஷ்முக்கை கடோல் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) சார்பாக போட்டியிட வைத்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று அனில் தேஷ்முக் தனது மகனுக்காக நர்கேட் என்ற கிராமத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு காரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கார் மீது கற்களை வீசி தாக்குதல்
கார் மீது கற்களை வீசி தாக்குதல்...
வரும் வழியில் பெல்பாடா என்ற இடத்தில் கார் வந்த போது மர்ம நபர்கள் சிலர் அனில் தேஷ்முக் கார் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் வீசப்பட்ட கல் நேராக அனில் தேஷ்முக் இருந்த கார் மீது விழுந்து முன்பக்க கண்ணாடி உடைந்து, முன் இருக்கையில் இருந்த அனில் தேஷ்முக் தலையை பதம் பார்த்தது. இதனால் அனில் தேஷ்முக் ப்டுகாயம் அடைந்து தலையில் ரத்தம் கொட்டியது.
உடனே அவர் அங்கிருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அனில் தேஷ்முக் சட்டை முழுக்க ரத்தம் படிந்திருந்தது. அதோடு காரிலும் கண்ணாடி துகள்கள் சிதறிக்கிடந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.
வேகத்தடை அருகே காத்திருந்த கும்பல்..
தலையில் கட்டுடன் அனில் தேஷ்முக், அருகில் தாக்கிய கல்இச்சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரித்து வருவதாக நாக்பூர் ரூரல் போலீஸ் அதிகாரி ஹரேஷ் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்று கோரி கடோல் போலீஸ் நிலையத்தை தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாஹேப் தோரட், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது என்று சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
கடோல் தொகுதியில் சலீல் தேஷ்முக்கை எதிர்த்து பா.ஜ.க சார்பாக சரன்சிங் தாக்குர் போட்டியிடுகிறார். இத்தாக்குதல் குறித்து பா.ஜ.க கடோல் தேர்தல் பிரசார பொறுப்பாளர் அவினாஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், அனில் தேஷ்முக் மீது நடத்தப்பட்டு இருப்பது நாடகம். அனுதாபத்தை ஏற்படுத்துவதற்காக மிகப்பெரிய நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இது போலியான தாக்குதலாகும். பா.ஜ.கவினரை அவமதிக்க இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது''என்றார்.