dark_mode
Image
  • Friday, 29 November 2024

மாற்றுத் திறனாளி மாணவர்களை கவனிக்க போதிய ஆசிரியர்களை நியமிக்க ஐகோர்ட் உத்தரவு

மாற்றுத் திறனாளி மாணவர்களை கவனிக்க போதிய ஆசிரியர்களை நியமிக்க ஐகோர்ட் உத்தரவு

மாற்றுத்திறனாளி மாணவர்களை கவனித்துக்கொள்ள ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை நிர்ணயித்து, அதனடிப்படையில் போதிய ஆசிரியர்களை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

புதுக்கோட்டையில் உள்ள காதுகேளாதோர் அரசு உயர் நிலைப் பள்ளியில் 48 காதுகேளாத மாற்றுத்திறனாளிகளும், 35 பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும் படித்து வருகின்றனர். பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்த மாணவர்களையும் சேர்த்து கவனித்துக்கொள்ள வேண்டும் என காதுகேளாதோருக்கு பாடம் நடத்தி வரும் ஆசிரியையான காயத்ரிக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், 365 நாட்களும் விடுமுறையின்றி பணியாற்றி வரும் தனக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்க உத்தரவிடக்கோரியும் ஆசிரியை காயத்ரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களை கவனித்துக் கொள்ள சிவகங்கையில் இருந்து ஆனந்தன் என்ற ஆசிரியர் புதுக்கோட்டைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, மனுதாரரான ஆசிரியை காயத்ரி கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 365 நாட்களும் விடுமுறையில்லாமல் பணியாற்றி வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதி, ''ஆண்டு முழுவதும் விடுமுறை இல்லாமல் யாரும் பணியாற்ற முடியாது என்பதால், அரசு விடுமுறை நாட்களிலாவது மனுதாரருக்கு விடுப்பு வழங்குவதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும்'' என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், ''பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயிக்கப்படுவதைப் போல, இதுபோன்ற சிறப்பு பள்ளிகளிலும் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க கொள்கை முடிவெடுப்பதுடன், அதனடிப்படையில் இந்த பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்'' என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.24-க்கு தள்ளி வைத்தார்.

மாற்றுத் திறனாளி மாணவர்களை கவனிக்க போதிய ஆசிரியர்களை நியமிக்க ஐகோர்ட் உத்தரவு

comment / reply_from

related_post

newsletter

newsletter_description