மணிப்பூரில் 11 பேர் சுட்டுக்கொலை.. மீண்டும் பதட்டம்..!
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கடற்படையினர் அங்கே பாதுகாப்பு பணியை செய்து வருகின்றனர். இந்த நிலையில் குகி ஆயுத குழுவைச் சார்ந்த 11 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குகி மற்றும் மெய்தி ஆகிய இரு பிரிவினர் இடையே கலவரம் வெடித்ததில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை தடை உள்பட சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் சமீப நாட்களாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் நிர்வாணமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தை அதிகரித்த நிலையில், தற்போது பாதுகாப்பு படையினருடன் குகி இனத்தை சேர்ந்தவர்கள் மோதியதன் காரணமாக 11 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சுட்டு கொலை செய்யப்பட்ட 11 பேரும் ஆயுத குழுவை சேர்ந்தவர்கள் என்றும் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.