மஞ்சள் புகையுடன் வானிலிருந்து விழுந்த பொருள்: சீனாவில் நடப்பது என்ன?
ஏவுகணையின் உதிரிபாகம் ஒன்று மஞ்சள் நிறப்புகையோடு வானிலிருந்து சீனாவின் குயின்சோ மாகாணத்தில் உள்ள ஜியான்கியோ கிராமத்தில் விழுவதை கிராம மக்கள் சனிக்கிழமை பார்த்துள்ளனர்.
இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் ஜிஜாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து சீனாவின் லாங் மார்ச் 2சி என்கிற ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளியின் பல்வேறு கூறுகளை ஆராயும் செயற்கைக்கோள் ஏந்திய இந்த ஏவுகணை சீனா மற்றும் பிரான்ஸின் கூட்டிணைப்பில் உருவான திட்டம்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வானியல் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்னணி வகிக்கும் விண்வெளி குறித்து ஆராயும் போட்டியில் சீனாவின் இடத்தை நிறுவ பல்வேறு திட்டங்களை அரசு மேற்கொண்டுவருகிறது.
லாங் மார்ச் 2சி ஏவுகணையை வடிவமைத்த சீனாவின் விண்வெளி அமைப்பான சிஏஎஸ்சி இந்த முயற்சி முழு வெற்றியடைந்ததாக அறிவித்தது.
இந்த நிலையில், லாங் மார்ச் 2சி ராக்கெட்டின் முதல் நிலை சக்தியூட்டும் உதிரிபாகம்தான் கிராமத்தில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முதலில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. வானிலிருந்து உதிரிபாகம் விழுவதை கிராமத்தினர் பார்த்துள்ளனர். இந்த உதிரிபாகம் உமிழும் புகை நச்சுப்பொருள்கள் நிறைந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏவுகணை ஆராய்ச்சியாளர் மார்க்ஸ் ஷில்லர், சீனாவில் இதுபோல நடப்பது புதிது கிடையாது எனத் தெரிவிக்கிறார்.
சீனாவின் ஏவுதளங்கள் அமைந்துள்ள புவியியல் அமைப்பின் காரணமாக இத்தகைய நிகழ்வுகள் நடப்பதாக அவர் தெரிவிக்கிறார். பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு ஏற்றாற்போல ராக்கெட் செல்ல கிழக்குமுகமாக வானில் ஏவப்படும். அவ்வாறு ஏவப்படும்போது ராக்கெட்டின் பூஸ்டர் இன்ஜின் கிராமங்களில் விழ வாய்ப்புண்டு.
சீனா தனது பல ஏவுதளங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் உள்புறமாக போர் காலத்தில் நிறுவியுள்ளது. இதுவே தற்போது பிரச்னையாக மாறியுள்ளது.
உதிரிபாகங்கள் விழுவதை தடுக்க நாஸா மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையங்கள் ஏவுதளங்களை கடலையொட்டி நிறுவியுள்ளன. மக்கள் வசிக்கும் பகுதியில் அவை விழுவதை இந்த அமைப்பு தடுக்கும்.
விண்வெளி திட்டங்களில் பாதுகாப்பு மற்றும் கழிவுகளை கையாளுவதில் சீனாவின் செயல்பாடுகளை நாஸா முன்னரே கண்டித்துள்ளது.
மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விண்வெளி திட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் அவசியத்தை இந்த நிகழ்வு விவாதப்பொருளாக்கியுள்ளது.
🙀 Behind the scenes of SVOM launch https://t.co/Fcc0OAY3ac pic.twitter.com/5fiM4oz2GY
— China 'N Asia Spaceflight 🚀𝕏 🛰️ (@CNSpaceflight) June 22, 2024