மகாராஷ்டிரத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்! சரத்பவார் நம்பிக்கை
மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25வது ஆண்டு நிறுவன நாள், புணே நகரில் இன்று(ஜூன் 10) கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி(சரத்சந்திர பவார் அணி) தலைவர் சரத்சந்திர பவார், அவரது மகளும் பாராமதி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது தொண்டர்களுடன் பேசிய சரத்பவர், "கடந்த 25 ஆண்டுகளாக, நம் கொள்கைகளை பரப்ப முயற்சித்து வருகிறோம். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தேர்தலுக்கு பின் மாநிலத்தின் அதிகாரம் உங்கள் கைகளில் இருக்கும் என்ற இலக்கை முன்வைத்து பணியாற்ற வேண்டியது நம் அனைவரது பொறுப்பு.
நாடு இப்போது முற்றிலும் மாறுபட்ட நிலையில் செல்கிறது. மக்களவை தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, ஆட்சியமைக்கும் தகுதி மோடிக்கு கிடைக்கவில்லை. அவர்களது கட்சியின் எம்.பி.க்கள் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. இந்த நிலையில், அவர்கள் பிகார் மற்றும் தெலுங்குதேசம் கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக தங்கள் விருப்பத்தின்படி அவர்கள் அரசை நடத்தினர். அவர்கள் யாருக்கும் செவிமடுக்கவில்லை. அவர்கள் கூறியதெல்லாம் கொள்கைகளாக மாற்றப்பட்டன. இப்போது அதிகாரம் நடுநிலைமையடைந்துள்ளது. நிலைமை மாறியுள்ளது. மக்கள் மறிவிட்டனர்" என்று பேசியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் மக்களவை தேர்தல் முடிவுகள் சரத்பவார் கூட்டணிக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. அங்கு 'இந்தியா' கூட்டணியில் அங்கம்வகித்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திர பவார் அணி), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை இணைந்து, மொத்தமுள்ள 48 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.