பொருளாதாரம், கலாச்சார துறைகளில் தொழில் வழிகாட்டி நிறுவனம், பிரிட்டிஷ் கவுன்சில் ஒப்பந்தம்
மாநிலத்தின் படைப்புத்திறன் சார்ந்த பொருளாதாரம் மற்றும் கலாச்சார தொழில் துறைகளை வலிமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இங்கிலாந்தின் கல்வி வாய்ப்புகள் மற்றும் கலாச்சார பரிமாற்றத்துக்கான சர்வதேச அமைப்பான பிரிட்டிஷ் கவுன்சில், தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவனம் இடையே, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிட்டிஷ் துணை ஹைகமிஷனர் ஆலிவர் பால்ஹாட்செட் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்திய இயக்குநர் ஜனக புஷ்பநாதன் மற்றும் தொழில்வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வி.விஷ்ணு ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
ஜனக புஷ்பநாதன் பேசும்போது, 'இங்கிலாந்து மற்றும் தமிழகம் இடையில் ஒருங்கிணைந்த நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆக்கப்பூர்வமான தொழில்களின் எல்லையற்ற திறனை வெளிக்கொண்டு வரவேண்டும். அதன்மூலம் இளைஞர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்துவதே எங்கள் நோக்கம்'' என்றார்.
இந்த ஒப்பந்தம் மூலம், படைப்புத் திறன் சார்ந்த தொழில் துறைகளில் தமிழகம் மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் எதிர்கால ஆராய்ச்சி கூட்டுறவுக்கான நீண்ட கால கொள்கை கட்டமைப்புகளுக்கு அடித்தளம் அமைக்க முடியும். தொழில்நுட்பக் கலை, திருவிழாக்கள், AVGC, இசை மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற துறைகளில்குறிப்பிடத்தக்க அளவில் கவனம் செலுத்தி நிலையான வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்கும், டிஜிட்டல் துறையில் புதுமைகளைப் புகுத்துவதற்கும், இளம் கலைஞர்கள், கலை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குவோம் என்று பிரிட்டிஷ் கவுன்சில் தெரிவித்துள்ளது.