பாலியல் வன்முறைக்குள்ளான ஸ்பெயின் பெண் பைக் ரைடருக்கு 10 லட்சம் இழப்பீடு
ஒரு வீடியோவில், 'பைக் கீழே விழுந்தால் இப்படித்தான் எளிதாக லிஃப்ட் செய்ய வேண்டும்' என்று 249 கிலோ எடை கொண்ட பிஎம்டபிள்யூ R1250 பைக்கை அவர் அசால்ட்டாக லிஃப்ட் செய்ததற்கு - Brave Woman…Strong Woman… Diamond Girl என்றெல்லாம் கமென்ட் செய்த நெட்டிசன்கள்… 'Sorry… Sorry on Behalf of India' என்று அவரிடம் இப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, 3 பேரை ஜார்க்கண்ட் மாநிலக் காவல்துறை கைது செய்திருக்கிறது என்பதையெல்லாம், இதற்கான ஒரு நியாயமான தீர்ப்பாக நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இதுகூடப் பரவாயில்லை; இந்தச் சம்பவத்துக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு செய்த காம்பன்சேஷன்தான் தலையில் அடித்துக் கொள்ளும்படியான ஒரு விஷயம்.ஸ்பெயின் பெண்மணி
மொத்த இந்தியாவும் அசிங்கப்படும்படியான சம்பவம் அது. இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு டூர் அடித்தபோதுதான் அந்தக் கேவலமான சம்பவத்தைச் சந்தித்திருக்கிறார் அவர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு மலைக்கிராமத்தில் இரவு டென்ட் அடித்துத் தங்கியபோது, 7 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவர் தன் கணவருடன்தான் இந்த ரைடை மேற்கொண்டிருக்கிறார். அவரை அடித்துக் காயப்படுத்திவிட்டு இந்தப் பாதகச் செயலை மேற்கொண்டிருக்கிறார்கள் அந்த வடமாநிலத்தவர்கள்.
இந்தச் செய்தி முதன்முதலில் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்கள் மூலமாகவே வெளிஉலகுக்குத் தெரிய வந்திருக்கிறது. அதன் பிறகு மிகத் தாமதமாகவே மீடியாக்களில் செய்தி ஆகியிருக்கிறது.
இந்தச் சம்பவம் நடந்த பிறகும் கணவன் - மனைவி இருவரும் தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் சோகமாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டவர்கள், இந்தியாவைப் பற்றித் தரக்குறைவாகவெல்லாம் பேசவில்லை. "அழகான நாடு இந்தியா. இங்கே நல்லவர்களும் இருக்கிறார்கள். இதுபோன்றவர்களும் இருக்கிறார்கள்!" என்று அவர்கள் ஸ்பானிஷில் சொல்லும்போது, கொஞ்சம் உடம்பெல்லாம் கூசத்தான் செய்கிறது.
10 லட்சம் இழப்பீடு பெறும் கணவர்
காயப்பட்ட கணவருக்கும், 7 கயவர்களால் பாதிக்கப்பட்ட அந்தத் தோழிக்கும் சேர்த்து 10 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியிருக்கிறார்கள், அரசு சார்பாக! காவல்துறை அதிகாரி ஒருவர், 10 லட்ச ரூபாய் காசோலை வழங்கும் அந்தப் புகைப்படத்தையும் (இதில் கணவர் புகைப்படம் Blur செய்யப்பட்டுள்ளது.) பெருமையாக ஷேர் செய்து வருவதை எந்தச் சட்டத்தில் ஏற்பது என்றுதான் தெரியவில்லை.
`ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அவலத்துக்கு 10 லட்சம் உதவித் தொகை கொடுத்ததால் அவருக்கு முறையான நியாயம் வழங்கியாயிற்று என்றாகிவிடுமா? வெறும் பணத்தால் அந்த அவலத்தையும் அவருக்கு நேர்ந்த துயரத்தையும் சரி செய்துவிட முடியுமா? காலத்துக்கும் அவர் சந்திக்கப்போகும் மன உளைச்சலுக்கு நிகராக ஒரு தொகையைத்தான் நம்மால் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியுமா? மிச்சம் 4 பேர் எங்கே?' என்றெல்லாம் சோஷியல் மீடியாக்களில் இது தொடர்பாக கமென்ட்களும் பதிவுகளும் கோபமாக வைரலாகி வருகின்றன. இப்போது ஹேஷ்டேக்குகளின் மூலம் இந்தச் செய்தியைப் பிரபலமாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.ஸ்பெயின் பெண்மணி
நெட்டிசன்களின் இந்தக் கோபம் நியாயமானதாகவே படுகிறது. "பார்த்தீங்களா… எங்க ஊருக்கு வந்து வன்கொடுமையைச் சந்திச்சா இழப்பீட்டுத் தொகை வழங்கிடுவோம்" என்று பெருமைபடச் சொல்வதுபோல் இருக்கிறது இந்தச் சம்பவம்.
சம்பவம் நடப்பதற்கு முன்பு தாஜ்மஹால் முன்பு அந்தப் பெண் எடுத்த புகைப்படங்கள், மகிழ்ச்சியாகத் தன் கணவருடன் யானை, ஒட்டக சவாரி செய்வது, ஹாலிவுட் கேட்டி பெர்ரி ஸ்டைலில் டென்ட் அடித்துத் தங்கியது போன்ற வீடியோக்களைப் பதிவிட்டபிறகு, ஒரு கண்ணீர் வீடியோவையும் பதிவு செய்ய வேண்டியிருக்கும் என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
தாஜ்மஹால் முன்பு கணவருடன்...உண்மைதான்... தைரியமான ஒரு பெண், அந்த 7 கொடூரன்களிடமும் எப்படிப் போராடியிருப்பார் என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. அதற்கு இழப்பீடாக பணத்தைக் கொடுக்கும் அவலம் நிச்சயம் இந்தியாவில் மட்டுமே அரங்கேறும்.