பங்குச் சந்தை உயர்வு: 90% சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு - ராகுல்
பங்குச் சந்தை வணிகம் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சிறுமுதலீட்டாளர்கள் ரூ.1.8 லட்சம் கோடியை இழந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பங்குச் சந்தை வணிகத்தில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இன்று உச்சத்தை எட்டி பின்னர் சரிந்தது. இதேபோன்று தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
கடந்த இரு நாள்களுக்கு முன்பும் புதிய உச்சத்தை செக்செக்ஸ் பதிவு செய்திருந்தது. கடந்த 4 நாள்களுக்கு முன்பு 84000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்.
செப்டம்பர் 12ஆம் தேதி 83000 புள்ளிகளைக் கடந்தது. இதற்கு முன்பு ஆக. 1ஆம் தேதி 82,000 புள்ளிகளைத் தொட்டது. ஜூலை 18ஆம் தேதி 81,000 புள்ளிகளைக் கடந்தது.
கடந்த 12 வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 80,000 புள்ளிகளில் இருந்து 85,000 புள்ளிகளைத் தொட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி இன்று 26,011 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.
90% சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு
இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது,
பங்குகளில் விலையை முன்பே தீர்மானித்து செய்யப்படும் கட்டுப்பாடற்ற வணிகமானது, 5 ஆண்டுகளில் 45 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது.
90% சிறு முதலீட்டாளர்கள் 3 ஆண்டுகளில் ரூ.1.8 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.
வணிகத்தில் பெரிய புள்ளிகளை உருவாக்குபவர்கள் என அழைக்கப்படுபவர்களின் பெயர்களை செபி வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.