நீதிபதி ஹேமா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்: நடிகர் மம்முட்டி வலியுறுத்தல்
மலையாள சினிமாவை உலுக்கி வரும் நீதிபதி ஹேமா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என நடிகர் மம்முட்டி வலியுறுத்தியுள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், அதிகார மையத்தில் இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களால் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியான பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். இதனையடுத்து பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.
அடுத்தடுத்து வரும் பாலியல் புகார்களால் மலையாள திரைப்பட நடிகர் சங்க( AMMA) தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து நடிகர் மோகன்லால் உள்பட பலரும் இச்சம்பவம் குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.