நாளை புரட்டாசி 1! திருமலை திருப்பதியில் 3 கி.மீ. தூரத்திற்கு நீண்டு இருக்கும் பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை பக்தர்கள் வருகை அதிகரித்தது.
இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகிறார்கள். அதிலும் பண்டிகை, விடுமுறை, விழாக்காலங்கள், பிரம்மோற்சவங்களின் போது இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும்.
திருப்பதியில் நேற்றைய தினம் அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைதான் தெரிந்தது. பக்தர்களின் அதிக வருகையால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பின.
அது போல் தங்கும் அறைகளுக்கு வர சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிருஷ்ணதேஜா கெஸ்ட் அவுஸ் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் ரூ 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
நேற்றைய தினம் 80,735 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். 40,524 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை கணக்கிடப்பட்டது. அதன்படி ரூ 3.19 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
நாளை முதல் புரட்டாசி மாதம் பிறக்கிறது. பிரம்மோற்சவமும் தொடங்கவுள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கூட்டம் அலை மோத போகிறது.