dark_mode
Image
  • Friday, 29 November 2024

நடிகர் முகேஷை கைது செய்ய நீதிமன்றம் தடை!ac

நடிகர் முகேஷை கைது செய்ய நீதிமன்றம் தடை!ac

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷை கைது செய்ய தடை விதித்து எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார்.

இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியதை தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டினார். இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் இயக்குநர் ரஞ்சித் விலகினார்.

இதேபோல ஹேமா கமிஷன் அறிக்கை அரசியல் ரீதியாகவும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சினிமா துறையில் பெண்களுக்கு எதிரான வக்கிரங்கள் நடந்தது 2019-ம் ஆண்டே ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் ஆதாரபூர்வமாகக் கிடைத்தும், கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

இதற்கு நடுவில் நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்கத் (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜிநாமா செய்தனர். இதன் பின்னர் விசாரணைக் குழுவில் நடிகைகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சித்திக் , இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சூழலில், தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க கோரி எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றத்தில் நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் மனு அளித்திருந்த நிலையில், 5 நாள்கள் அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யக் கோரி நடிகர் முகேஷுக்கு எதிராக கேரள காங்கிரஸினர் இன்று காலை முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் முகேஷை கைது செய்ய நீதிமன்றம் தடை!ac

comment / reply_from

related_post

newsletter

newsletter_description