திற்பரப்பு அருவியில் 8வது நாளாக குளிப்பதற்கான தடை நீடிப்பு | சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்நிலைகள், அருவிகள், மலைப் பிரதேசங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிகளால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை இன்று 8வது நாளாக நீடித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு விநாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை 8வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.