திரைப்பட இயக்குனர் மோகன் ஜியை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பழனி கோயில் பஞ்சாமிருதம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டிருந்த இயக்குனர் மோகன் ஜியை திருச்சி நீதிமன்றம் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளது.
திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இயக்குனர் மோகன் ஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டது குறித்து கூறிய தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி , இந்த விவகாரத்தில் அரசு எச்சரிக்கையுடன் இருக்க என்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் பலரும் மோகன்ஜிக்கு எதிராக கருத்துக்களை கூறியதுடன், கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி இன்று காலை போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி திருச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "இந்து மதத்தினரையும், இந்து மக்களையும் புண்படுத்தும் விதமாக பேசிய தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டிந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறையில் மேலாளராக பணிபுரிந்து வரும் கவியரசு என்பவர், கொடுத்த புகாரில், கடந்த 21.09.2024-ஆம் தேதி மதியம் 01.00 அளவில் தான் பணியில் இருந்த போது, பக்தர்கள் சிலர் இந்து மதத்தையும், இந்து கோவில்களை பற்றியும் தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி அவர்கள் பேசியதாக பேசிக்கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து எனது செல்போனை பார்த்தபோது, தனியார் யூடியூப் வளைதளத்தில் "உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா என்ற தலைப்பில்" அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக, உண்மைக்கு புறம்பான விமர்சனம் செய்து, கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதாகவும், தற்சமயம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் அசைவ பொருட்களான மீன் எண்ணெய்யும், மாட்டு கொழுப்பும் கலந்து உள்ளதாக கூறப்படும் விவகாரம் அடங்குவதற்குள், தமிழக மக்களிடையே மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், பொய்யான செய்தி பரப்பியதாக, தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, 39/24, த.பெ.குணசேகரன், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மேற்படி நபர் கைது செய்யப்பட்டு. நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அன்புணி ராமதாஸ் வெளியிட்ட பதிவில், "தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் எந்த வித குற்றமும் செய்யாத நிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை காவல்துறை இதுவரை தெரிவிக்கவில்லை. எந்த ஒரு வழக்கிலும் ஒருவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில், அவை எதையும் கடைபிடிக்காமல், ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல மோகனை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் பஞ்சாமிர்தம் சில வாரங்களுக்கு முன் பெருமளவில் அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட ஐயங்களைத் தான் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் இது தொடர்பான செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தான் அவர் கூறியிருந்தார். இதில் எந்தத் தவறும் இல்லை. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் அழிக்கப்பட்டதன் பின்னணி குறித்த முழு விவரங்களை அரசு வெளியிட்டிருந்தால் இந்த சிக்கலே எழுந்திருக்காது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் சிக்கல் தொடர்பாக சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கிருந்து தனிப்படை காவலர்கள் விரைந்து வந்து மோகனை கைது செய்திருப்பதன் பின்னணியில் திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலை இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக் கூடாது. இயக்குனர் மோகனை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதனிடையே போலீசார் அறிவித்தபடியே திருச்சி நீதிமன்றத்தில் இன்று மாலை இயக்குனர் மோகன் ஜி ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிபதி, இயக்குனர் மோகன் ஜியை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். இதனால் இயக்குனர் மோகன் ஜி உடனடியாக விடுவிக்கப்பட்டார்.