dark_mode
Image
  • Friday, 29 November 2024

திருவேற்காட்டில் வீடுகளை இடித்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை கைவிடுக- சீமான்

திருவேற்காட்டில் வீடுகளை இடித்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை கைவிடுக- சீமான்

திருவேற்காட்டில் அரும்பாடுபட்டு கட்டிய வீடு அரசால் இடிக்கப்படும் என்ற அச்சத்தில் உயிர்விட்ட அன்புத்தம்பி சங்கர், இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்க திமுக அரசு காத்திருக்கிறது?

என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு கோலடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. இரண்டு தலைமுறைகளாக வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் மக்களை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்பாளர்களெனக்கூறி அகற்ற முற்படுவது கொடுங்கோன்மையாகும்.

திருவேற்காட்டில் கோலடி பகுதியில் 1448 குடும்பங்களாக வீடுகள் கட்டி, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கு செலுத்தி வாழ்ந்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும். திராவிடத் திருவாளர்கள் அம்மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள், இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? இத்தனை ஆண்டுகளாக அப்பகுதியில் வராத வெள்ளப் பாதிப்பு திடீரென்று எப்படி வரும்? திமுக அரசு காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, அதன் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.

வீடுகள் இடிக்கப்படும் என்று திமுக அரசால் ஒட்டப்படும் அறிவிக்கையால், விரைவில் தங்கள் வீடு இடிக்கப்படுமோ என்ற அச்சத்தில் திருவேற்காடு கோலடி பகுதி செந்தமிழ் நகரைச் சேர்ந்த அன்புத்தம்பி சங்கர் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தம்பி சங்கரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். தம்பி சங்கரின் மரணத்திற்கு திமுக அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்டு சிறுகச் சிறுக சேர்த்தப் பணத்தில், பார்த்து பார்த்துக் கட்டிய வீடு கண் முன் இடிக்கப்படுவதைக் காண இயலாது உயிரை மாய்த்துக்கொண்ட தம்பி சங்கரைப் போன்று இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்க திமுக அரசு காத்திருக்கிறது?

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த மூன்றரை ஆண்டுகளில் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. அரசியல்வாதிகள் மற்றும் பெருமுதலாளிகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்கத் திறனற்ற திமுக அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். இதுதான் திராவிட மாடல் திமுக அரசு கடைபிடிக்கும் சமத்துவமா? சமூக நீதியா? என்ற கேள்விகள் எழுகிறது. ஆகவே, ஆவடி தொகுதிக்குட்பட்ட, திருவேற்காடு கோலடி பகுதியில் வாழ்ந்து வரும் தொல்குடி மக்களின் வீடுகளை இடித்து, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவினை உடனடியாக கைவிட்டு, வீடுகளை இடிக்கும் உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெறவேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருவேற்காட்டில் வீடுகளை இடித்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை கைவிடுக- சீமான்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description