திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் போது 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தேவஸ்தான அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
தீபத் திருவிழாவை காண சென்னை உள்பட பல்வேறு நகரங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, பெங்களூர், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், வேலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, விருத்தாச்சலம், ஆர்.கே. நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மட்டும் 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சிறப்பு பேருந்துகளுக்கான தற்காலிக பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.