திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் ஜூன் 24ம் தேதி சென்னையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான நிலையில், 100க்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணம் இந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவில் மருத்துவம் படிப்பதற்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி அடையவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பை படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது.
ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். மேலும் சட்டசபையிலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதா மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே தான் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் முறைகேடு புகார் எழுந்தது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியது என்று அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் கருணை மதிப்பெண் வழங்கியது தொடர்பான விவகாரத்தில் சுமார் 1,500க்கு மேற்பட்டவர்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு முன்பாக பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. இந்த வினாத்தாள் ரூ.32 லட்சத்துக்கு மாணவர்களுக்கு விற்பனை செய்யப்ட்டுள்ளது. இதுதொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த கோரி நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
இத்தகைய சூழலில் தான் நீட் தேர்வை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி செயலாளரும், எம்எல்ஏவுமான எழிலரசன் அறிவித்தார் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும். நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகளை, குளறுபடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் என்பது அறிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் பலியாகி உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு 100க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கண்டித்து பாஜக, அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இது தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் திமுக மாணவரனி சார்பில் ஜுன் 24ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நீட் எதிர்ப்புக்கான ஆர்ப்பாட்டம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்திவைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கான மாற்று தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் நீட் தேர்வு எதிர்ப்பு திமுக உறுதியாக உள்ளது. விரைவில் மாற்று தேதி அறிவிக்கப்பட்டு நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.