தி.மு.க.,வுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்: ராமதாஸ்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என, முதல்வர் ஸ்டாலின் கைவிரித்து விட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.அரசு ஊழியர்கள் துணையுடன் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், இப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுப்பதன் வாயிலாக, உண்மை முகத்தை காட்டியுள்ளார்.லோக்சபா தேர்தலில், அரசு ஊழியர்களின் ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற நிலையில், இனி ஒன்றரை ஆண்டுகளுக்கு, அவர்களின் தயவு தேவையில்லை என்பதால், இப்போது துணிச்சலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கூறிஇருக்கிறார்.
வரும் 2026 சட்டசபை தேர்தலின் போது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என, மீண்டும் வாக்குறுதி அளிப்பார்.தி.மு.க.,விடம் தொடர்ந்து ஏமாறுவதற்கு, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஏமாளிகள் அல்ல. தி.மு.க., அரசின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு பழி தீர்க்கும் வகையில், வரும் சட்டசபை தேர்தலில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.