தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று 16 மற்றும் 17-ம் தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 18-ம் தேதி முதல் வரும் 21-ம் தேதி வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியைப் பொருத்த வரையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.