டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிலை 1, 2, 3 கட்டுப்பாடுகளுடன் நிலை 4 அமலாகிறது. டெல்லியில் குளிர் காலம் தொடங்கும் நிலையில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
இதனால், மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 7 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 457 ஆக திடீரென அதிகரித்தது. இதனால், கிராப் திட்டத்தின் 4 வது நிலை கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அந்த மாநில முதல்வர் அடிசி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், '10, 12ம் வகுப்புகளை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் கிளாஸ் நடத்த வேண்டும். அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் இணைப்புகள், குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி, பிஎஸ் -4 பெட்ரோல் வாகனங்கள் மட்டும் டெல்லிக்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது. பிஎஸ் 3 பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. மாநில அரசு, மாநகராட்சி ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும்,' என்று கூறப்பட்டுள்ளது.