டிரைவரே இல்லாத மெட்ரோ ரயில்.. பூந்தமல்லி, சிறுசேரியில் 3 x 3 பெட்டியுடன் இன்று ஓடுது..
பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்றைய தினம் நடைபெற உள்ளது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை பயணிகளிடம் ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் சொல்வதென்ன?
சென்னையை பொறுத்தவரை, மெட்ரோ சேவைகள் தவிர்க்க முடியாததாகிவிட்டன.. தினமும் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். எனவே, மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை கருத்தில் கொண்டு 3 வழித்தடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.. இதில் 2ம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி முறையில் ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது..
சென்னை மெட்ரோ: 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூ.1,215.92 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே வழங்கியிருந்தது. பிறகு ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணிகளும் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பமானது. இந்த பணியானது, கடந்த செப்டம்பர் வரை நீடித்து முடிக்கப்பட்டது.. இதற்கான அறிவிப்பையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருந்தது..
இந்நிலையில் ஓட்டுநர் அல்லாத முதல் மெட்ரோ ரயிலை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்திருக்கிறார்கள்.. 3 பெட்டிகள் அடங்கிய முதல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சோதனை ஓட்டம்: இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் சொல்லும்போது, "வரும் ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட 3 மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது. அடுத்த 6 மாத காலம் பூந்தமல்லி முதல் போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்லும் பிரதான வழிதடத்தில் குறிப்பிட்ட சில கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் நடைபெற உள்ள சோதனை ஓட்டத்தில் சிக்னல், பிரேக் பாயிண்ட், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சோதனைகள் நடைபெற உள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
பூந்தமல்லி: மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட் (45.4 கி. மீ), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பனிமனை (26.1 கி. மீ) , மாதவரம் - சோழிங்கநல்லூர் (44.6 கி. மீ) வரையிலும் என சுமார் 116.1 கி. மீ தொலைவிற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.