ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க.. பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!
19வது ஜி20 உச்சி மாநாடு இன்று பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளில் தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ரியோவுக்கு சென்று சேர்ந்திருக்கிறார்.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டின் முக்கிய விவாத பொருளாக மூன்று விஷயங்கள் உள்ளன.
1. பசி மற்றும் சமூக பாகுபாடுகளுக்கு எதிராக போராடுதல்
2. ஆற்றலை மாற்றுதல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு
3. உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம்
என முக்கிய மூன்று அஜெண்டாக்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங் பிங் பங்கேற்பார் என்று சொல்லப்படுகிறது. எனவே, இம்மாநாட்டில் மோடியும், ஜி ஜிங்பிங்கும் சந்திக்க வாய்ப்பு இருக்கின்றன.
மாநாட்டில் பங்கேற்க பிரமர் மோடி இன்று பிரேசில் சென்று சேர்ந்திருக்கிறார். ரியோவில் தரையிறங்கி அவருக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பிரேசில் வாழ் இந்தியர்களும் மோடிக்கு சிறப்பான வரவேற்பளித்துள்ளனர். 5 நாட்கள் பயணமாக புறப்பட்டுள்ள மோடி, நேற்று நைஜீரியா சென்றிருந்தார். அங்கு அந்நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர்' விருது மோடிக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனை இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து கயானா சென்ற மோடி அங்கிருந்து இன்று அதிகாலை ரியோ டி ஜெனிரோவுக்கு சென்று சேர்ந்திருக்கிறார். 18வது ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்தி இருந்த நிலையில், இன்று தொடங்கும் 19வது ஜி20 மாநாடு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அதேபோல அமெரிக்கா தரப்பிலிருந்து ஜோ பைடன் இதில் பங்கேற்கிறார். அதிபராக பைடன் பங்கேற்கும் கடைசி ஜி20 மாநாடு இதுதான் என்பதால், இம்மாநாட்டில் அமெரிக்கா என்ன பேசப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.