dark_mode
Image
  • Friday, 29 November 2024

ஜாமினில் வெளியே வந்தவருக்கு தியாகிப்பட்டமா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

ஜாமினில் வெளியே வந்தவருக்கு தியாகிப்பட்டமா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகி ஜாமினில் வெளிவரும் தன் கட்சிக்காரர்களுக்கு, முதலமைச்சர் தியாகி பட்டம் வழங்குவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்று முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், எமர்ஜென்சி காலத்தில்கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என்றும் உறுதி அதனினும் பெரிது என்றும் முதலமைச்சர் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியை வரவேற்று சமூகவலைதளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்தற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகி ஜாமினில் வெளிவரும் தன் கட்சிக்காரர்களுக்கு ஒரு முதலமைச்சரே தியாகி பட்டம் வழங்குவதால், சமூக விரோத சக்திகள் அனைவரும் தெம்புடன் வலம் வருவது ஆச்சரியமில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளதற்கு காரணகர்த்தாக்கள் யார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்த சரக்கு பெட்டகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும், ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் என செய்திகள் வருவதை காண முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளதற்கு காரணகர்த்தாக்கள் யார் ?, என்று தெரிந்திருந்தும், அவர்கள் மீது சட்டத்தின் இரும்புப்பிடி நீளாமல், கடத்தலில் ஈடுபடும், குருவிகள் என்றழைக்கப்படும், சிறு சிறு கடத்தல் வேலை செய்யும் ஒருசிலரை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடிக்கும் மர்மம் என்ன என்றும் வினவியுள்ளார்.

கடந்த 40 மாத திமுக ஆட்சியில், சமூக விரோத சக்திகளும், ஆளும் தரப்பினரும் பிரிக்க முடியாத அளவு இணைந்து செயல்படுவதால் தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளதாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் போதைப் பொருட்களின் ஆணிவேரை கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஜாமினில் வெளியே வந்தவருக்கு தியாகிப்பட்டமா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description