சென்னையில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து: ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை
சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த தில்லை கங்காநகர் பகுதியில் பறக்கும் ரயில் கட்டுமான பணியின் போது 80 அடி நீளத்திற்கு பாலத்தின் மேற்பகுதி சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த தில்லை கங்காநகர் பகுதியில் பறக்கும் ரயில் கட்டுமான பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முதலில் தூண்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் இரு தூண்களுக்கு இடையேயான மேற்பரப்பில் தண்டவாளம் அமைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், திடீரென இரு தூண்களுக்கு இடையேயான பாலத்தின் மேற்பரப்பு பகுதியானது இடிந்து விழுந்தது. கிட்டத்தட்ட 80 அடி நீளமுடைய பாலத்தின் மேற்பகுதி அப்படியே இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக இடிந்து விழுந்த இடத்தில் பணிகள் ஏதும் நடக்காததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உடனடியாக விபத்து நடந்த இடத்தை சுற்றிலும் பொதுமக்கள் வராத வகையில் தடுப்பு வைத்து அடைத்தனர். விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். எனினும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். தொடர்ந்து விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து, அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்ததா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.