சென்னையில் கார் பந்தயம்.. முக்கிய சாலைகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகள் அலர்ட்
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் நாட்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை சென்னையில் பிரதான சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர். இது குறித்து இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை இந்த கார் பந்தயம் போட்டி நடைபெறுகிறது. சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி இந்த போட்டியானது நடைபெறுகிறது.
கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது இன்று தீர்ப்பு விதித்த உயர் நீதிமன்றம் சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.
மேலும் கூறிய நீதிமன்றம், எப்.ஐ.ஏ சர்வதேச அமைப்பு சான்று பெறாமல் பந்தயம் நடத்தக்கூடாது. யாருக்கும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவனை, ரயில் நிலையங்கள் செல்பவர்கள் உள்பட யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் அறிவுறுத்தியது.
போக்குவரத்து மாற்றம்: இந்த நிலையில் இதனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான "சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்" 30.08.2024 முதல் 01.09.2024 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி 30.08.2024 முதல் 01.09.2024 வரை மதியம் 12.00 மணி முதல் 22.00 மணி வரை நடைபெற இருப்பதால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெற்கிலிருந்து வரும் வாகனங்கள்:a) காமராஜர்சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.
b) மவுண்ட் ரோட்டில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். c) சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.
வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்:
a) காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை. b) சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன்சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
b) முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை. ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்
கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்:
தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12.00 மணி முதல் 22.00 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெறும் இடம்: 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இந்த கார் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த சர்க்யூட், தீவுத் திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் எனபது குறிப்பிடத்தக்கது.
கார் ரேஸ் போட்டிகளைக் காணச் செல்வோர் மெட்ரோ ரயில் மூலமாகச் செல்லலாம். மவுண்ட் ரோடு, அண்ணா சதுக்கம், பிராட்வே செல்லும் பேருந்துகளிலும் செல்லலாம். மேலும், சொந்த வாகனங்களில் செல்பவர்கள் பார்க்கிங் செய்வதற்கான இடங்களும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஃபார்முலா 4 ரேஸ் அட்டவணை: ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிகளின் கால அட்டவணை, கிராண்ட்ஸ்டாண்ட் இருக்கை விவரங்கள், தீவுத்திடலில் உள்ள பார்வையாளர் மாடங்களின் விவரங்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். அதன்படி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. மாலை 5.30 மணியளவில் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள்:
பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்த பொருளும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படாது. இந்த பொருட்களை சேமிப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. மேலும் அவை அனைத்தும் பாதுகாப்பு சோதனை சாவடிகளில் பறிமுதல் செய்யப்ப்டும். திரும்பத் தரப்படமாட்டாது. கூர்மையான பொருட்கள்: பிளேடுகள், கத்திகள், கத்திரிகோல், ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள், பெப்பர் ஸ்பிரே,பெரிய சங்க்கிலிகள் போன்றவை. ஆயுதங்கள்: துப்பாக்கிகள், கத்திகள், ராணுவ கத்திகள் பொன்றவை.