சென்னையில் இன்று சம்பவம் இருக்கு.. சில இடங்களில் மிக கனமழை பெய்யுமாம்.. வானிலை ஆர்வலர் அலர்ட்
'தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
2024-ன் வழக்கமான வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. சென்னை மற்றும் புறநகரில் விட்டு விட்டு மழை தொடரும். சில இடங்களில் மிக கனமழையை இன்று எதிர்பார்க்கலாம்' என்று சென்னை ரெயின்ஸ் என்ற தனியார் வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் மழை பெய்தது. 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. நவம்பர் மாதம் பிறந்த பிறகு மழை பெரிய அளவில் பெய்யவில்லை. தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. நேற்று இரவு பெய்த மழை தொடர்ந்து விடிய விடிய இன்று காலை வரை தொடர்ந்தது.
இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால் சென்னையின் ஒருசில இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதற்கிடையே சென்னை ரெயின்ஸ் என்ற தனியார் வானிலை ஆர்வலர் கூறுகையில், சென்னையில் 2024-ன் வழக்கமான வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 2024-ன் வழக்கமான வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. சென்னை மற்றும் புறநகரில் விட்டு விட்டு மழை தொடரும். சில இடங்களில் மிக கனமழையை இன்று எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அடுத்த இரண்டு நாட்களில் சராசரியாக 11 முதல் 12 செமீ மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையின் கடலோர பகுதிகளில் 20 செமீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த மழை பெரும்பாலும் விட்டு விட்டு பெய்வதற்கான வாய்ப்பு தான் அதிகம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை 4.30 மணியளவில் உருவானது. இது இலங்கை மற்றும் தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதேபோன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதேபோல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீ உயரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கையாக பள்ளிக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.