dark_mode
Image
  • Friday, 29 November 2024

"சுவாமியே சரணம் ஐயப்பா".. கார்த்திகை முதல் நாள்.. மாலை அணிந்து விரதம் தொடங்கிய சபரிமலை பக்தர்கள்!

கார்த்திகை மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும், ஐயப்பன் கோவில்களில் அதிகாலையிலேயே மாலை அணிந்து பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 15 ஆம் தேதியான நேற்று, மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை, ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று திறக்கப்பட்டது.

நவம்பர் 16 ஆம் தேதி, அதாவது கார்த்திகை முதல் நாளான இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐயப்பன் பக்தர்கள் இன்று அதிகாலையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். "சுவாமியே சரணம் ஐயப்பா" என்ற கோஷத்துடன் விரதத்தை தொடங்கியுள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் பக்தர்கள் 48 நாள்கள் விரதத்திற்கு பிறகு இருமுடி கட்டிக்கொண்டு காடு மேடு ஆறு மலை கடந்து சபரிமலை நோக்கி பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு கல் முள் கடந்து சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு தீராத பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.

சபரிமலைக்கு விரதம் இருந்து பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியிலேயே பெரும்பாலும் விரதத்தை தொடங்குவது வழக்கம். அந்தவகையில் இன்று ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். குருசாமி கையால் துளசி மணிமாலை அணிந்து ஐயப்ப விரதத்தை துவக்க வேண்டும் என்பது நியதி. முதல் முறையாக சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் கருப்பு உடை அணிந்தும், பல முறை சபரிமலை சென்றவர்கள் காவி, நீல நிறங்களில் உடை அணிந்தும் விரதம் இருப்பார்கள்.

அதன்படி, கார்த்திகை மாதம் 1 ஆம் தேதியான இன்று அதிகாலை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் இருக்கின்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடிவிட்டு, மாலை அணிந்து கொண்டுள்ளனர்.

comment / reply_from

related_post

newsletter

newsletter_description