சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை;திமுக அரசு அலட்சியம்: பழனிசாமி வேதனை
சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் தி.மு.க., அரசு, அலட்சியத்துடன் செயல்படுவது வேதனை அளிக்கிறது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தமிழத்தில் டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவி வருவதால், மாநிலத்தில் காய்ச்சல் முகாம்கள், ரத்தப் பரிசோதனை, வீடு வீடாக சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளனரா?
மற்றும் மழைநீர் பழைய டயர்கள், பாத்திரம் போன்றவற்றில் தேங்காமல் உள்ளதா? என்பதை கண்காணிக்கவும், கொசு மருந்து அடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவு மருந்துகளை இருப்பு வைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தி.மு.க., அரசை பலமுறை வலியுறுத்தியிருந்தேன். ஆனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இன்று டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரை இழந்துள்ளார். இச்சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது முதல்வர், சுகாதாரத்துறை, மாநிலத்தில் மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.