'சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல்'.. கள்ளக்குறிச்சியில் ஆறுதல் கூற போனபோது கைக்கலப்பு - பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறப்போனபோது திடீரென்று ஏற்பட்ட கைக்கலப்பில் நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும் தற்போது வரை 50 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் 20 பேரின் உடல்நிலை அபாயகட்டத்தில் தான் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே தான் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர்கள் உதயநிதி, மா சுப்பிரமணியன், எவ வேலு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக எம்பி வைகோ, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் உள்பட பலரும் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான சாட்டை துரைமுருகன் காரில் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றார். இந்த வேளையில் அங்கிருந்த சிலர் சாட்டை துரைமுருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சாட்டை துரைமுருகனிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஒருவர் திடீரென்று பாய்ந்து சாட்டை துரைமுருகனை தாக்கினார். உடனடியாக சாட்டை துரைமுருகன் சுதாரித்து கொண்டு விலகினார்.
ஆனாலும் அந்த நபர் விடவில்லை. தொடர்ந்து சாட்டை துரைமுருகனை தாக்க முயன்றார். இதனால் பதிலுக்கு சாட்டை துரைமுருகனும் அவரை தாக்க முயன்றார். இதனால் கைக்கலப்பு உருவானது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சாட்டை துரைமுருகனிடம் பேசி காரில் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தான் இந்த தாக்குதலின் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சாட்டை துரைமுருகன் தனது யுடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த வீடியோ காரணமாக தான் அவர் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.