சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு.. மண்டல காலம் நாளை தொடங்குகிறது..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல காலம் நாளை தொடங்குகிறது.. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
இன்று மாலை தான் நடை திறக்கப்படும் என்றாலும், நேற்று முதலே தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வரத்தொடங்கிவிட்டனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு மண்டல மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.. அந்தவகையில், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கிறார்கள்.
சபரிமலை: மண்டல மகர விளக்கு பூஜைகள் நடைபெறும் கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட்ட மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை நோக்கி புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் டிசம்பர் 26ம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதியும் நடைபெற உள்ளது.
மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.. பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
பூஜைகள்: இன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பிறகு, நாளை முதல் ஒரு வருடகாலத்துக்கு சபரிமலையிலேயே தங்கி பூஜைகள் செய்யும் மேல் சாந்திகள் சபரிமலை -அருண்குமார் நம்பூதிரி, மாளிகைபுறம் - வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை அழைத்து சன்னிதானம் முன் கொண்டு வருவார்.
தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அவர், இவர்களுக்கு அபிஷேகம் நடத்தி முறைப்படியாக பதவி ஏற்க செய்யும் நிகழ்வு நடைபெறும்... இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். வேறு விசேஷ பூஜைகள் கிடையாது.
நெய்யபிஷேகம்: நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.
பரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டு, புல்மேடு வனப்பாதையின் தொடக்கப் பகுதியில் நுழைவாயில் அமைத்து பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.. மேலும் உணவு, தங்குதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வரவேற்பு: மேலும் பக்தர்களை வரவேற்கும் விதமாக காட்டு மரங்களின் இலைகளால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு நுழைவுவாயிலும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் செய்து கொள்வதற்கான வசதியும், சன்னிதான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான தகவல் மையமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக தமிழக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை தான் நடை திறக்கப்படும் என்றாலும் நேற்று முதலே தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், இவர்கள் இன்று மதியத்திற்கு பிறகுதான் தான் பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தரிசனம் நேரம்: இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் சொன்னபோது, "சபரிமலையில் நாளை 16ம் தேதி முதல் பக்தர்கள் 18 மணி நேரம் தரிசனம் செய்யலாம். அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தால் இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும் . பிற்பகல் 2 மணிநேரம் மட்டுமே நடை மூடப்பட்டிருக்கும். பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்தால் தரிசன நேரம் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்" என்றார்.