சபதத்தை நிறைவேற்றி சட்டப்பேரவைக்கு வந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு..!
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே ஆந்திர சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம் ஏற்பட்டு, பேரவையிலிருந்து வெளியேறினார் சந்திரபாபு நாயுடு.
அப்போது, தான் முதல்வராக பதவியேற்கும் வரை, மீண்டும் சட்டப்பேரவைக்கு வரமாட்டேன் என்று சபதம் எடுத்திருந்தார். அவர் சபதம் எடுத்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. நேற்று அவர் தனது சபதத்தை நிறைவு செய்துள்ளார். ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட சந்திரபாபு நாயுடு பேரவைக்கு வருகை தந்தார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் பல சட்ட நடவடிக்கைகளை சந்தித்துவந்தார் சந்திரபாபு நாயுடு. தற்போது, பாஜக மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆந்திர முதல்வராகியிருக்கிறார். முதல்வராகி, மீண்டும் ஆந்திர பேரவைக்குத் திரும்பி, தனது சபதத்தை முடித்துள்ளார் சந்திரபாபு நாயுடு.
முன்னதாக, ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதி உருவாக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். விசாகப்பட்டினம் பொருளாதார தலைநகராகவும், மேம்பட்ட சிறப்பு நகரமாகவும் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.