"சந்தேஷ்காலி விவகாரத்தில் பாஜக பொய் தகவல்களை பரப்புகிறது" - மோடிக்கு மம்தா எதிர்வினை
"சந்தேஷ்காலி பற்றி பாஜக பொய்யான தகவல்களைப் பரப்புகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் மேற்கு வங்கம்" என்று அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மாநில தலைநகர் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அணியின் பேரணி வியாழக்கிழமை நடந்தது. அதில் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "சிலர் சந்தேஷ்காலி பற்றி தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பாஜக தலைவர்கள் வதந்திகளைப் பரப்புகிறார்கள். ஆனால், அவர்களின் கட்சி ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து மவுனம் காக்கிறார்கள். நாட்டில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் மேற்கு வங்கம்" என்று தெரிவித்தார்.
'சந்தேஷ்காலியின் கோபம் தணிந்து போகாது. அந்தப் புயல் மாநிலத்தின் பிற இடங்களுக்கும் பரவும்' என அங்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து திரிணமூல் காங்கிரல் ஆட்சியை சாடி பிரதமர் மோடி பேசியதற்கு பதிலடியாகவே முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது பேசியுள்ளார்.
மேலும் தனது பேச்சில் இன்று பாஜகவில் இணைந்துள்ள கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயையும் விமர்சித்திருந்தார். அவர் கூறுகையில், "உங்களின் தீர்ப்புகள் மூலம் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பறித்துள்ளீர்கள். இளைஞர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். உங்களுடைய தீர்ப்புகள் எல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. வரும் மக்களவைத் தேர்தலில் எங்கிருந்து நீங்கள் போட்டியிட்டாலும் நாங்கள் உங்கள் தோல்வியை உறுதி செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதன்கிழமை மேற்கு வங்கத்தில் பேசிய பிரதமர் மோடி, 'சந்தேஷ்காலியில் நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும் பாவத்தைச் செய்துள்ளது. அங்கு நடந்ததைக் கேட்கும் எல்லோரும் வெட்கி தலைவகுனிவார்கள். ஆனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியோ உங்களின் வலியைப் பற்றி கவலைப்படவில்லை. திரிணமூல் காங்கிரஸ் அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்தி குற்றவாளியை காப்பாற்றுகிறது. ஆனால், முதலில் உயர்நீதிமன்றத்தில் அதிர்ச்சியைச் சந்தித்த மாநில அரசு பின்பு உச்ச நீதிமன்றத்திலும் பின்னடைவைச் சந்தித்தது" என்று பிரதமர் மோடி பேசியிருந்தார்.
சந்தேஷ்காலி வழக்கு: மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டம் சந்தேஷ்காலி தீவுப் பகுதி கடந்த ஜன.5ம் தேதி முதல் சர்ச்சைகளால் அதிக கவனம் பெற்றுவருகிறது. மாநிலத்தின் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் நடந்த ஊழல் தொடர்பாக கடந்த அக்டோபரில் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜியோதி பிரியா மால்லிக் கைது செய்யப்பட்டர்.
இவரது நெருங்கிய உதவியாளரான திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் ரேஷன் பொருள் விநியோக ஊழல் தொடர்பாக சோதனை நடத்த அமலாக்கத்துறையினர் ஜன. 5ம் தேதி சென்றனர். அப்போது அமலாக்கத் துறை அதிகாரிகளை ஷாஜகான் ஆதரவாளர்கள் சுற்றிவளைத்து தாக்கினர். அதன்பின் ஷாஜகான் தலைமறைவாகிவிட்டார்.
இதனிடையே ரேஷன் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்றச் செயல்களில் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளனர். சந்தேஷ்காலி தீவுப் பகுதியில் 10 கி.மீ தூரத்துக்கு உள்ள பழங்குடியினரின் நிலங்களை ஷாஜகான் ஆக்கிரமித்துள்ளார். பழங்குடியின பெண்களை கட்சி அலுவலகத்துக்கு இரவில் வரச் சொல்லி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவருக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்தால், ஷாஜகான் மீது உள்ளூர் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாதவர்களை சித்ரவதை செய்துள்ளனர்.
ஹாஜகான் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சந்தேஷ்காலி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். ஷாஜகான் கைது செய்யப்படாததற்கு, கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசை கண்டித்தது. இதனைத் தொடர்ந்து சந்தேஷ்காலி தீவில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள சுந்தரவனப் பகுதியில் உள்ள பாமன்புகுர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்தனர். 55 நாட்கள் தலைமறைவுக்குப்பின் அவர் கைது செய்யப்பட்டார்.