குழந்தைகளின் கல்வி செலவுகளை தமிழக அரசே ஏற்கும் - முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது;- "பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும்.
இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கும் வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ் தனி நிதியம் ஏற்படுத்தி, அதற்கு முதல் கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்படும். மாவட்டம் தோறும் களஆய்வு செய்ய தொடங்கி உள்ளேன். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருப்பணி, ஆயத்த ஆடை பூங்கா, சிவகாசி மாநகராட்சி அலுவலகம், 1,286 கிராமங்களுக்கு ரூ.1,387 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.தேசிய அளவில் உயர்கல்வி செல்வோர் விகிதம் 33 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் 60 சதவீதமாக உள்ளது.
இந்த ஆட்சியின் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களால் உயர்கல்வி சேர்க்கை அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.
இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு நல் ஆளுமை விருது, பள்ளிக்கல்வித் துறையின் சிறந்த செயல்பாட்டுக்கான சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த பணிக்காக 2024-ம் ஆண்டின் சிறந்த ஆட்சியர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன" என்றுத் தெரிவித்துள்ளார்.