கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த பூங்கா அமைந்துள்ள இடம், ஒரு சங்கத்திடம் இருந்து அரசால் மீட்கப்பட்டு தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டது.
சென்னை மாநகர மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அந்த நிலத்தில் உலகத்தரம் வாய்ந்த பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ரூ.45.99 கோடியில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்காவை பார்வையிட்டார்.
பூங்கா நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜிப்லைன் சாகச பயணம் செல்ல பெரியவர்களுக்கு ரூ.250, சிறியவர்களுக்கு ரூ.200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150. பறவையகத்தை பார்வையிட, உணவு அளிக்க பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75. மாலை நேரத்தில் இசை நீரூற்று நடனம் காண ரூ.50, கண்ணாடி மாளிகையை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.40. குழந்தைகள் பங்கு பெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50, புகைப்பட கருவிகளுக்கு ரூ.100, வீடியோ கேமராக்களுக்கு ரூ.5,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு கட்டணம் 3 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.