கன்னியாகுமரி மாவட்டத்தில் 'டவ் தே' புயலால் 3-வது நாளாக இன்று கனமழை நீடித்தது. கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் சிக்கி விளைநிலங்கள், சாலைகள் தண்ணீரில் மூழ்கின..!
அரபிக் கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று வரும் 'டவ் தே' புயலால் குமரி மாவட்டத்தில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 3-வது நாளாக இன்றும் கனமழை பெய்தது. தொடரும் மழையால் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான குமரி கடலோர கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டது. இதைப்போல் மழைநீரில் விவசாய நிலங்கள் மூழ்கின.
அதிகபட்சமாக இன்று (மே 16) சிவலோகத்தில் (சிற்றாறு 2) 79 மி.மீ., மழை பெய்தது. பூதப்பாண்டியில் 21 மிமீ., சிற்றாறு ஒன்றில் 74, களியலில் 58, கன்னிமாரில் 27, கொட்டாரத்தில் 29, குழித்துறையில் 63, மைலாடியில் 33, நாகர்கோவிலில் 32, பேச்சிப்பாறையில் 42, பெருஞ்சாணியில் 67, புத்தன்அணையில் 66, சுருளகோட்டில் 75, தக்கலையில் 60, குளச்சலில் 55, இரணியலில் 44, பாலமோரில் 52, மாம்பழத்துறையாறில் 32, ஆரல்வாய்மொழியில் 17, கோழிப்போர்விளையில் 38, அடையாமடையில் 49, குருந்தன்கோட்டில் 24, முள்ளங்கினாவிளையில் 38, ஆனைகிடங்கில் 27, முக்கடலில் 21 மிமீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 52 மிமீ., மழை பதிவானது.
கனமழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 2485 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையின் நீர்மட்டம் 43.13 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 4,427 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, மற்றும் கால்வாய்-களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெருஞ்சாணி அணைக்கு 2,212 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில் நீர்மட்டம் 60.75 அடியாக உயர்ந்துள்ளது. சிற்றாறு ஒன்றுக்கு 409 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையின் நீர்மட்டம் 11.31 அடியாக உயர்ந்துள்ளது. சிற்றாறு இரண்டு அணைக்கு 610 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில் நீர்மட்டம் 11.41 அடியாக உள்ளது. பொய்கை அணையில் 16.80 அடியும், மாம்பழத்துறையாறில் 30.84 அடியும், முக்கடல் அணையில் 5.5 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.
பழையாறு, பரளியாறு உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள ஆறு, கால்வாய்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றங்கரை மற்றும் கரையோர பகுதிகளில் மக்கள் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிதறால் செல்லும் சாலையான வள்ளகடவில் போதிய வடிகால் வசதியில்லாததால் மழைநீர் சாலைகளை மூடியது. அத்துடன் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தன. அப்பகுதி மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தும் ஆறுபோல் மழை நீர் தேங்கி நின்றன.
தேங்காய்பட்டணம், மிடாலம், புத்தன்துறை, இனயம் புத்தன்துறை, பூத்துறை, முள்ளூர்துறை உட்பட கடற்கரை கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டு கிராமத்திற்குள் மழை, மற்றும் கடல் நீர்புகுள் ஆபத்து நிலவியது. அழகியபாண்டியபுரம், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், சிறமடம், கல்படி, சுங்காங்கடை, வில்லுக்குறி போன்ற பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சூறைகாற்றில் முறிந்து சேதமடைந்தன. ஆற்றங்கரையோரம் உள்ள விளைநிலங்கள்ம தண்ணீரில் மூழ்கின.
மழையால் குமரி மாவட்டத்தில் இதுவரை 2 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். அருமனை அருகே சுவர் இடிந்து விழுந்து யூஜின் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் ராமன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பெட்மின் என்பவரின் வீட்டு மேற்கூரை இடித்து விழுந்ததில் அவரது 2 வயது குழந்தை ரெஜினால் உயிரிழந்தார். குமரி மாவட்டத்தில் டவ் தே புயல் சேதங்களை எதிர்கொள்ளும் வகையிலும், மழை வெள்ளம் சூழும் பகுதிகளிலும் குமரி மாவட்ட தீயணைப்பு மீட்புத்துறை அலுவலர் சரவணபாபு தலைமையில் 18 மீட்பு குழுவினர் இரவு, பகலாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.