கட்டணம் வசூலிப்பதில் வாக்குவாதம் நத்தம் அருகே சுங்கச்சாவடி சூறை: மாயமான கும்பல் குறித்து போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பரளிபுதூர் பகுதியில், மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு, இந்த சுங்கச்சாவடி பகுதி அருகே வத்திபட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் கழிவுநீர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது அவருக்கும், சுங்கச்சாவடி பணியாளருக்கும் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த கழிவுநீர் வாகன ஓட்டுநர், அங்கிருந்து கிளம்பி சென்ற சிறிது நேரத்தில், அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் ஒன்று, சுங்கசாவடி பகுதியில் இருசக்கர வாகனத்தை கொண்டு வாகனங்களை செல்லவிடாமல் மறித்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த கேமராக்கள், தடுப்புகள், பூந்தொட்டிகள் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பாக இருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த மையத்தில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் தமிழகத்திலேயே அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.