கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: புதுச்சேரி அரசு அதிரடி! எதிர்பார்ப்பில் தமிழக மாணவர்கள்
புதுச்சேரியில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பம் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளுக்கு கடந்த மே 1 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் 25ஆம் தேதியிலிருந்து துவங்கி நடைபெற்று வந்தது. ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்து மே 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
மேலும் ஜூன் 6 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடும் வெயில் காரணமாக ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மிகக் கடுமையான வெப்பம் நிலவியது. பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் தாக்கம் வெகுவாக அதிகரித்து காணப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரியில் நிலவிய வரலாறு காணாத வெப்பம் நீங்கி சில நாட்களுக்கு முன்பாக பல இடங்களிலும் கோடை கனமழை பெய்தது. பல மாவட்டங்களில் இதற்காக ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மழை விட்ட பிறகு மீண்டும் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. வெப்பநிலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடுமையான வெயில் காரணமாக கோடை விடுமுறையை நீட்டித்து புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும் ஜூன் 6ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும்.
இது தொடர்பாக கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள உத்தரவில், 'புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும், வெப்ப அலை காரணமாக வரும் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும், பள்ளி திறப்பு தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.