கடலூர், விழுப்புரத்தில் பேருந்து சேவை முடக்கியது.!!
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று புதுச்சேரி முழுவதும் முழு அடைப்புக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
அதிமுக மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளின் அழைப்பை ஏற்று இன்று காலை முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து இயங்கவில்லை, அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன இதனால் புதுச்சேரி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த நிலையில் கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் பேருந்துகள் அனைத்தும் விழுப்புரம் மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோன்று கடலூர் மற்றும் விழுப்புரம் இருந்து புதுச்சேரிக்கு இறக்கப்படும் அனைத்து தனியார் பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது அரசு பேருந்துகள் சேவையும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் வேலைக்கு செல்லும் நிலையில் தற்போது அனைத்து பேருந்து சேவைகளும் முழுமையாக முடங்கியுள்ளது. பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
விழுப்புரம் மற்றும் கடலூரில் இருந்து செல்லும் ஆட்டோக்கள் புதுச்சேரி எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் மக்கள் அதிக அளவில் பயணிக்கின்றனர். புதுச்சேரி பந்து எதிர்வழி காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பேருந்து சேவை முழுமையாக முடங்கியுள்ளது.