எல்லை மீறும் கனடா.. ஜெய்சங்கர் பேச்சை ஒளிபரப்பிய செய்தி நிறுவனத்திற்கு தடை.. இந்தியா கடும் கண்டனம்
இந்தியா கனடா இடையே மிக மோசமான ஒரு உறவே நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். நிலைமை மேலும் மோசமாக்கும் வகையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் செய்தியாளர் சந்திப்பை ஒளிபரப்பிய ஊடகத்தைக் கனடா அரசு பிளாக் செய்துள்ளது.
இது பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், இந்தியா இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இந்தியா கனடா இடையே கடந்த சில காலமாகவே மிக மோசமான உறவு நிலவி வருகிறது. இந்தியா மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கனடா முன்வைப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
ஜெய்சங்கர்: இதற்கிடையே இரு நாட்டு உறவை மேலும் மோசமாக்கும் வகையிலான செயலை இப்போது கனடா செய்துள்ளது. அதாவது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கரின் செய்தியாளர் சந்திப்பை ஒளிபரப்பிய ஊடகத்தைக் கனடா அரசு பிளாக் செய்துள்ளது. இது பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், பேச்சு சுதந்திரம் குறித்து மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் கனடா, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது ஏன் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
நமது நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது ஆஸ்திரேலியா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்த அவர், விரிவான ஆலோசனை நடத்தினார். மேலும், 15வது வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு குறித்தும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங்கை சந்தித்துப் பேசினார். ஜெய்சங்கரின் இந்த சந்திப்பு குறித்த தகவல்களை ஆஸ்திரேலியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
எல்லை மீறும் கனடா: மேலும், கான்பெராவில் ஜெய்சங்கர் நடத்திய செய்தியாளர் சந்திப்பும் ஒளிபரப்பப்பட்டது. அந்த செய்தியாளர் சந்திப்பில் தான் அவர் இந்தியா கனடா இடையேயான உறவு மோசடைவது குறித்துப் பேசியிருந்தார். மேலும், கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்தும் விளக்கியிருந்தார். இது குறித்த செய்திகளை ஆஸ்திரேலியா டுடே செய்தியாக வெளியிட்டு இருந்தது. இது நடந்து சில மணி நேரத்தில் ஆஸ்திரேலியா டுடேயின் சமூக வலைத்தள பக்கங்கள் கனடாவில் முடக்கப்பட்டது. இது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்தியா கண்டனம்: இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "புலம் பெயர்ந்தோரின் முக்கிய ஊடகமான அந்த ஊடகத்தின் (ஆஸ்திரேலியா டுடே) சமூக வலைத்தளப் பக்கங்கள் கனடாவில் பிளாக் செய்யப்பட்டுள்ளன. கனடாவில் அந்த ஊடகத்தின் பக்கங்களை யாராலும் பார்க்க முடியவில்லை. நமது வெளியுறவுத் துறை அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு ஒளிபரப்பப்பட்டு சில மணி நேரத்தில் இது நடந்துள்ளது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. விசித்திரமாகத் தெரிகிறது. கருத்துச் சுதந்திரம் குறித்து மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் கனடா உண்மையில் என்ன செய்கிறது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது
என்ன காரணம்: இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெய்சங்கர் 3 விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசியிருந்தார். முதலில் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இந்தியா மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது. அடுத்து இந்தியத் தூதர்களைக் கண்காணிப்பது- இது ஏற்கவே முடியாத செயல் என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளுக்கு அரசியலில் இடமளிப்பது குறித்தும் ஜெய்சங்கர் பேசியிருந்தார். ஆஸ்திரேலியா டுடே செய்தி நிறுவனம் ஏன் பிளாக் செய்யப்பட்டது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும்" என்றார்.